×

அம்பிகை சந்நதியில் விபூதி பிரசாதம்

ஆச்சாள்புரம்திருஞானசம்பந்தர் தமது துணைவியார் தோத்திரப் பூர்ணாம்பிகை (சொக்கியார்) யுடன் சிவஜோதியில் கலந்த தலம் திருநல்லூர்ப் பெருமணம் என்ற ஆச்சாள்புரம். இவ்வூருக்கு சிவலோகம், திருநல்லூர், திருமணவைமுத்திபுரம், ஆச்சாள்புரம் என பல பெயர்கள் உண்டு. திருஞானசம்பந்தரின் திருமண காலத்தில் அம்மையார் பேதமின்றி யாவருக்கும் திருவெண்ணீறு (விபூதி) அளித்து சிவனடியார்களை ஜோதியினுள் புகச் செய்ததால் திருவெண்ணீற்றுயுமையம்மை என பெயர் கொண்டாள். அதன் காரணமாக இன்றும் இத்தலத்தில் அம்பாள் சந்நதியில் விபூதியை பிரசாதமாக அளித்தபின்பே குங்குமப் பிரசாதம் தரப்படுகிறது. ஆச்சார்யரான ஞானசம்பந்தர் மோட்சம் அடைந்ததினால் ஆச்சாரியபுரம் என்றும், பிறகு மருவி ஆச்சாள்புரம் என இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் சிவலோகத் தியாகர் என வணங்கப்படுகிறார். தான் இருந்த சிவலோகத்தை தியாகம் செய்துவிட்டு இங்கு வந்து பக்தர்களுக்கு அருட்பாலிப்பதால் அவருக்கு அந்தப் பெயராம்! ஆலயம் ஊருக்கு நடுவில் இரண்டு பிராகாரங்களுடன் விளங்குகின்றது. உயர்ந்த மதில் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. முன்புறத்தில் ராஜகோபுரத்தோடு கூடிய வாயில் உள்ளது. சுவாமியும், அம்பாளும் கிழக்கு முகமாக உள்ளனர். வெளி பிராகாரத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் தோத்திரபூரணி அம்மையுடன் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். அவர் அருளும் பிராகாரத்தில் சனிபகவான் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்கிறார். வெளிச்சுற்றின் தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. தென்மேற்கில் மாவடி விநாயகரும், மேற்கில் முருகக் கடவுளும் வடமேற்கு திசையில் அம்பிகை சந்நதியும் உள்ளன. வடகிழக்கில்  யாகசாலையும், உட்சுற்று திருமாளிகையில் அறுபத்து மூவரும் மேலத்திருமாளிகை பத்தியில் சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, விநாயகர், முருகன், சந்திரசேகரர் உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். வடக்கு திருமாளிகை பத்தியில் பூகைலாசநாதர், நாகநாதர், சுந்தரேஸ்வரர், விஸ்வநாதர், மாத்ரு பூதேஸ்வரர் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். துர்க்காதேவியும் அதே பிராகாரத்தில் அருள்கிறாள். ஈசனின் முன் உள்ள மண்டபத்தின் வடக்கே பள்ளியறையும், சபையும் உள்ளன. கீழ் திசையில் சூரியன், பைரவர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், சந்திரன் ஆகியோருக்கான சந்நதிகள் உள்ளன. இத்தலத்தில் காரண காமீக ஆகம முறைப்படி தினமும் ஐந்துகால பூஜைகள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவம் முடிந்த மூன்றாம் நாள் வைகாசி மூலத்தன்று தோத்திரப் பூர்ணாம்பிகையோடு திருஞானசம்பந்தர் திருமணமும், பஞ்சாட்சர திருப்பதிகமாகிய தேவாரத்துடன் முக்தி அடைந்த நிகழ்ச்சியும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் அருளும் ஈசனை நான்முகன், முருகன், ஜமதக்னி, அத்ரி, துர்வாசர், வியாசர், மிருகண்டு முனிவர், அகத்தியர், மாந்தாதர், காகமுனிவர், கங்கை போன்றோர் வழிபட்டு பற்பல பேறுகளை பெற்றுள்ளார்கள் என தலபுராணம் கூறுகிறது.இத்தலம் திருக்கையிலாய பரம்பரை தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட 27 தேவஸ்தானங்களில் ஒன்று. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடத்திற்குக் கிழக்கே 7 கி.மீ.தொலைவில் உள்ளது, ஆச்சாள்புரம். பேருந்து வசதிகள் உண்டு….

The post அம்பிகை சந்நதியில் விபூதி பிரசாதம் appeared first on Dinakaran.

Tags : Vibhuti Prasad ,Ambigai Sannadi ,Achalpuram ,Thirunalurb Perumanam ,Tirunalurp Perumanam ,Tirunalurb Perumanam ,Dothrap Purnambikai ,Sokkiar ,
× RELATED கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்